பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே மெய்யுருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதி இதானோ
புலம் பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே (பெம்மானே)
சோறில்லை சொட்டு மழை நீர் இல்லை
கொங்கையிலும் பால் இல்லை கொன்றையோனே
மூப்பானோம் உருவழிந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்களோயே
ஊண்டெய்தோம் ஊணுருவி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உதய்கோனே
நீராகி ஐம்புலனும் வேராகி
பொன்னுலகம் சேறாகிப்போக மாட்டோம்
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்
ஓம்……… ஓம்……… ஓம்………
பொன்னார் மேனியனே வெம்புலி தோல் உடுத்தவனே
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சு உண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ
பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ……